இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 வயது குழந்தையை அம்மாநில பொலிஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தனது குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது ஜஷீத். என்ற சிறுவன், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். சிறுவனுடன் சென்ற அவனது பாட்டியை எட்டித் தள்ளிவிட்டே அந்த கும்பல் சிறுவனை கடத்தியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
சிறுவனை கடத்தும் போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், இருட்டின் மறைவிலேயே இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,
பின்னர் 8 படைகளை அமைத்து தீவிரமாக தேட தொடங்கினர். சிறுவனை கடத்தியவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளிவராத நிலையில்,
2 நாட்களுக்கு பின்னர் குட்டுகுலுரு எனும் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு அருகே சிறுவன் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிறுவன் ஜஷீத்தை பத்திரமாக மீட்டனர்.
இதுதொடர்பாக சிறுவனை விசாரித்தபோது, தன்னை கடத்தியவர்களுள் ஒருவர் பெயர் ராஜூ என்றும், எங்கு தங்கியிருந்தேன் என்பது பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளான்.
மேலும் 2 நாட்களாக வெறும் இட்லி மட்டுமே கொடுத்தனர் எனவும், அடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை எனவும் கூறியுள்ளான்.
இதன் அடிப்படையில் பொலிஸார் கடத்தல்காரர்களை தேட ஆரம்பித்துள்ளனர்.