வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகள் அடையாளம் காட்டுமாறு மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்லிம் முசானா உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவில் திருட்டுப் போன நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் வேறு சில வழக்குகளுடன் தொடர்பு பட்டதாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் நீதிமன்ற பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, திருட்டுப் போன நகைகளை குறித்த வழக்காளியிடம் மீள ஒப்படைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் றியாழ் உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது குறித்த உரிமையாளர் நகைகளை அடையாளம் காட்டவில்லை. இவ்வாறு மூன்று தடவைகள் நீதிமன்றுக்கு வருகை தந்த உரிமையாளர் தனது நகைகளை அடையாளம் காட்டாமையால் சந்தேகம் அடைந்த நீதிபதி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நகைகளை பார்வையிட்டார்.
இதன்போது பல நகைகள் காணாமல் போயிருந்ததுடன், பவுண் நகைகளுக்கு பதிலாக போலி நகைகள் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைவாக வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் தலைமறைவாகினார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தலைமைவாகிய உத்தியோகத்தரின் உறவினர் மற்றும் நீதிமன்றில் கடமை புரிந்த உத்தியோகத்தர் ஒருவர் என இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சில நகைகள் குறித்த இருவரின் பெயர்களில் வங்கிகளில் அடைவு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்லிம் முஸானா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது பெட்டகத்தில் உள்ள நகை உரிமையாளர்களை அழைத்து அவர்களது நகைகளை அடையாளம் காட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை தவைமறைவாகியுள்ளவரை பொலிஸார் தேடி வருவதுடன் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.