நுவரெலியா சாந்திபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சஹ்ரான் கடந்த வருடம் தங்கியிருந்தது தொடர்பாக வெளியான தகவல் குறித்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சாந்திபுரத்திலுள்ள வீடொன்றில் கடந்த வருடம் சஹ்ரான் ஹாசிம் குழுவினர் வாடகை வீடொன்றில் குடியிருந்ததாகவும், அவர்களில் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும், எனினும் பொலிசார் அந்த முறைப்பாட்டை கணக்கிலெடுக்கவில்லையென ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தார்-
சஹ்ரான் கடந்த வருடம் தங்கியிருந்தது தொடர்பான விடயத்தில் பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடயத்தில் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அங்கு தங்கியிருந்தது சஹ்ரான் காசிம் என்றா அல்லது சந்தேகநபர் என்றா முறையிட்டார் என்பதும் ஆராயப்பட வேண்டும்.
அவர் கூறும் காலப்பகுதியில் நுவரெலியா பகுதிக்கு பொறுப்பாக மஹிந்த திசாநாயக்க கடமையாற்றினார்.
அவர் இப்பொழுது குருநாகலிற்கு பொறுப்பாக செயற்படுகிறார். தனக்கு தொலைபேசியில் அப்படியொரு முறைப்பாடு கிடைக்கவில்லையென கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றார்.