துபாய் தொழில் அதிபர் என கூறி ஏமாற்றி 4 பெண்களை திருமணம் செய்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நான்கு மனைவிகளையும் குழந்தைகளுடன் தவிக்கவிட்டு நடன அழகிகளை தேடிச்சென்றவர் ராமநாதபுரம் போலிஸாிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
இராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் பகுதியை சேர்ந்த கோட்டை ராஜு என்பவரது மகள் கோமலாதேவி என்பவர் தான் 4 திருமணம் செய்த தனது கணவனின் லீலைகளை காவல் நிலையத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
பி.காம் படித்துவிட்டு அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த கோமலாதேவிக்கும், மாடக்கொட்டான் பகுதியை சேர்ந்த துபாய் ரிட்டனான கங்காதரனுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணம் முடிந்த கையோடு கங்காதரன், மனைவியின் நகை மற்றும் குடும்ப பணத்தை கொண்டு துபாய் ஸார்ஜாவில் அல்-தரன் என்ற பெயரில் தனியார் பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் MANPOWER நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று வீடெடுத்து தங்கவைத்துள்ளார். நாட்கள் சில கடந்த நிலையில் கங்காதரன் நடவடிக்கை சரியில்லாததை கண்டறிந்துள்ளார் கோமலா தேவி.
மனைவியிடம் இரவு நேரங்களில் வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அங்குள்ள பப்புகளுக்கு சென்று நடன அழகிகளுடன் நெருக்கம் காட்டியுள்ளார் கங்காதரன், இதுகுறித்து விசாரித்த மனைவி கோமலா தேவியை இந்தியாவிற்கு அழைத்துவந்து விட்டு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்தியா வந்த கங்காதரன் தொலைபேசிக்கு இரவு 12 மணிக்கு இரண்டு அழைப்புக்கள் வந்துள்ளது. அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட கோமலா தேவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எதிர்முனையில் பேசிய பெண் தன்னை கங்காதரன் மனைவி என அறிமுகம் செய்துகொண்டதோடு, தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரித்த போது அவர் சின்ன சேலம் பகுதியை சேர்ந்த கவிதா என்பது தெரியவந்துள்ளது. ஆனால் கவிதா என்றால் தனக்கு யார் என்றே தெரியாது என மழுப்பியுள்ளார் கங்காதரன்.
பின்னர் அவரை கண்காணிக்க எண்ணிய கோமலா தேவி இரவு கங்காதரன் தூங்கும் வரை காத்திருந்து அவரது தொலைபேசியை ஆய்வு செய்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கவிதா மட்டுமன்றி சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைபடங்கள் மற்றும் வாட்சப் உரையாடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் கணவர் மீது கோமலாதேவி மோசடி புகார் அளித்துள்ளார். வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான் திருந்தி விட்டதாக கூறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச்சென்று கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார். அதனை உண்மை என நம்பி தனது பெயரில் இருந்த கம்பெனியை மாற்றி எழுதிக்கொடுத்துள்ளார் கோமலாதேவி.
இந்த நிலையில் கங்காதரன் , சென்னையை சேர்ந்த தீபா என்ற பெண்ணை அண்மையில் 4 ஆவதாக திருமணம் செய்து அவருக்கும் பெண் குழந்தை இருப்பதை அறிந்து கோமலா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த 4 பெண்களையும், நான் அவனில்லை என்ற தமிழ் சினிமா பாணியில், பெண்ணின் உறவினர்கள் முன்னிலையிலேயே பெண் பார்த்து துபாய் தொழில் அதிபர் என்று கூறி கங்காதரன் திருமணம் செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட காலம் வாழ்ந்துவிட்டு குழந்தை பிறந்தவுடன் தவிக்கவிட்டு அடுத்த திருமணத்திற்கு தயாராகி சென்றுவிடுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அவரது முதல் மனைவி கோமலா தேவி.
இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி கோமலா தேவி அளித்துள்ள புகாரின் பேரில் கணவர் கங்காதரனை அழைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.