நாட்டிற்குள் கப்பல் மூலம் கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களில் மருத்துவக் கழிவுகள் காணப்படின் அது பாரிய ஆபத்தை தோற்றுவிக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.
சுங்கத்திணைக்களம் சுற்றாடல் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளில் அக்கறை செலுத்த தவறியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த கழிவுப் பொருட்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தினை உணர்ந்து சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க அதிகாரியொருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களில் மருத்துவக்கழிவுகள் மற்றும் உடல் பாகங்களும் காணப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சத்திர சிகிச்சை கழிவுகள் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை மூண்டுள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் மருத்துவக் கழிவுகளும் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஆகவே, இது தொடர்பில் உரிய தரப்பினர் தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறான மருத்துவக் கழிவுகள் காணப்படின் அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.
கொண்டுவரப்பட்ட கழிவுப்பொருட்கள் தற்போது துறைமுகத்தில் கொள்கலன்களிலிருந்து வெளியில் அகற்றிய நிலையிலேயே காணப்புடுகின்றன வெயில் , மழை போன்றவற்றினால் மேலும் அவை சேதமாவதுடன் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய நிலை காணப்படுகின்றது .
இதனால் புற்றுநோய் , சுவாசப்பிரச்சினை, மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இது தொடர்பில் சுங்கத்திணைக்களம் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆனாலும், இது தொடர்பில் தகுந்த சுகாதார நடைமுறைகள் சுங்கத்திணைக்களத்தில் இல்லை. இவ்வாறான கழிவுப்பொருட்களினால் சுங்கத்திணைக்களத்தில் தொழில் புரிவோருக்கும் பாரதூரமான பாதிப்புக்கள்ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
ஆகவே, சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுங்கத்திணைக்களத்திடம் கேட்டுக்கொண்டுள்ளளோம். அரசாங்கம் நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்த கூடிய சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் திருட்டுத்தனமாக கைச்சாத்திட்டது.
அதன்விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
சுங்கத்திணைக்களத்தின் தரவுகளின் படி 241 கழிவுப்பொருட்கொள்கலன்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில்130 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் எஞ்சிய 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் இந்தப் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.2013 ஜூலை 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைச் சுட்டிக்காட்டி கடந்த அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆகவே , ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதுடன், அவர் சுற்றாடல் அமைச்சர் என்பதால் இது தொடர்பில் தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றார்.