ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக மாகாணசபை தேர்தலை நடத்தும் அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில், மாகாணசபை தேர்தலை முதலில் நடத்தும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடுவார் என தெரிகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. மாகாணசபை தேர்தலை நடத்துவதெனில், அடுத்த ஒரு மாதத்திற்குள் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.
மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயக்கம் காட்டி வந்ததுடன், தேர்தல் முறையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்து வந்தது.
முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே தமக்கு சாதகமானதென கருதி வந்தது. இந்த நிலையில் ஏழு மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தும்படி பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையிலேயே, மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
கலப்பு முறையிலான தேர்தலாகவே இந்த தேர்தல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓகஸ்ட் 11ம் திகதி பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் தலைமை பதவியை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டால், அவரை கட்சியிலிருந்து நீக்கி, நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாமலாக்க ஜனாதிபதி மைத்திரி அதிரடி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
பெரமுன தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் எம்.பிக்களின் உறுப்புரிமையையும் இல்லாமலாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.