சுவிட்சர்லாந்தில் கருத்து வேறுபாட்டால் இளம் மனைவியை கொன்றுவிட்டு நபர் ஒருவர் சூரிச் நகர பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
கொல்லப்பட்ட 24 வயது சுவிஸ் தாயாரின் 11 மாத பிராயம் கொண்ட பிள்ளையை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஞாயிறன்று சூரிச் பொலிசாரை அணுகிய 33 வயது நபர், தமது மனைவி சுகவீனமாக படுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை செல்லாமல் பொலிசாரை நாடிய அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
உடனடியாக அவரது குடியிருப்புக்கு மருத்துவ உதவி குழுவினரையும், பொலிசாரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது குடியிருப்பினுள் அவரது மனைவி மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குடியிருப்பில் 11 மாத பிள்ளை ஒன்றும் இருந்துள்ளது.
பிள்ளையை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளம் தாயார் கொலைக்கு முக்கிய காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மட்டுமின்றி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பிலும் பொலிசார் தகவல் வெளியிட மறுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் அண்டை வீட்டார், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக பதிவு செய்துள்ளனர்.
மனைவி மீது சந்தேகம் மற்றும் பொறாமை காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஒரே அங்காடியில் வேலை செய்வதாகவும், திருமண உறவில் ஏற்பட்ட விரிசலே கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் அயல் வீட்டார் தெரிவிக்கின்றனர்.