2015-2018ம் ஆண்டுகளிற்கிடைப்பட்ட காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் அண்மையில் மஸ்கெலியவில் உள்ள லெமன்மூரா பண்ணைக்கு ஒரு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.
அங்கு 2017ல் அவுஸ்திரேலியாவிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 மாடுகள் இறந்த விவகாரம் தொடர்பில் ஆராயவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலம் அவுஸ்திரேலியாவிலிருந்து சுமார் 5,000 மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு 67 பண்ணைகளுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டன. எனினும், இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களில் சுமார் 40 சதவீதமானவை பின்னர் பல நோய்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வந்தது. இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த விசாரணைக்குழு, பல பண்ணைகளுக்கு விஜயம் செய்தனர். 26 பண்ணை உரிமையாளர்கள் இந்த வழக்கில் ஆணைக்குழு முன் சாட்சியங்களை வழங்கினர்.
ஜனாதிபதி ஆணைக்குழு தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னே மற்றும் உறுப்பினர்கள் நீதிபதி குசல சரோஜனி, எம்.பி. தர்மரத்ன, விஜய அமரசிங்க, ஏ.பி.ஏ.ஜினசேனா ஆகியோர்அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.