க.பொத.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளிற்கான பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலையொன்று பணத்திற்கு வழங்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியிலேயே இந்த சம்பவம் நடந்ததாக பெற்றோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவிகளிற்கான அனுமதி அட்டை, நேற்று திங்கட் கிழமை(29) சுபநாள், நேரம் பார்த்து பல பாடசாலைகள் வழங்கின. கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியிலும் நேற்று அனுமதி அட்டை வழங்கப்பட்டது. எனினும், பரீட்சை அனுமதி அட்டைகள் தேவையான மாணவிகள் ஒவ்வொருவரும் 1910 ரூபா தந்தால்தான் அனுமதி அட்டை தருவோம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
பாடசாலை நிர்வாகத்தின் திடீர் நிபந்தனையால் மாணவிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். சிலர் வீடுகளிற்கு திரும்பிச் சென்று பணத்தை எடுத்து வந்து பரீட்சை அனுமதி அட்டையை பெற்றனர். சிலர், கடன் பெற்று அட்டையை பெற்றனர். பணத்தை கொடுக்க முடியாத மாணவிகள், நேற்று பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.