முஸ்லிம் குவாஷி நீதிமன்றங்களால் முஸ்லிம் பெண்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக அண்மையில் பல முஸ்லிம் பெண்கள் பகிரங்கமாக தமது அனுபவங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நேற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை இரண்டு முஸ்லிம் பெண்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு நேரில் சென்ற அவர்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை பகிரங்கப்படுத்தினர்.
முஸ்லிம் திருமண விவகாரத்தை கையாளும் முஸ்லிம் குவாஷி நீதிமன்றம் மற்றும் உள்ளூர் மசூதி ஆகியவற்றால் தான் அநியாயமாக நடத்தப்படுவதாக பண்டராகாம, அதுலுகமவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் முதலில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து மாளிகாவத்தை மற்றும் ஊவா பரணகம போவெல பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விவாகரத்து நடவடிக்கைகளில் குவாஷி நீதிமன்றத்தால் நியாயமற்று நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் கண்டியை சேர்ந்த ஒருவர், தனது 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த அதே நபருடன் திருமணம் செய்து வைத்ததாக குவாக்ஷி நீதிமன்றம் மீது குற்றம்சுமத்தியுள்ளார்.
இந்தப் பின்னணியில் கொழும்பின் அளுக்கடவைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் குவாஷி நீதிமன்றங்களால் முஸ்லிம் பெண்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.