கட்டாயப்படுத்தி செய்து வைக்கப்பட்ட திருமணத்திலிருந்து தன்னை பாதுகாக்கும்படி துபாய் இளவரசி ஹயா பிரித்தானிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான துபாய் அரசர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (70), தன்னுடைய ஆறாவது மனைவியாக ஜோர்டான் மன்னரின் சகோதரியான 45 வயது ஹயா பின்த் ஹுசைனை திருமணம் செய்தார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர்களுக்கு இடையேயான விவகாரத்து செய்தி வெளியானதை அடுத்து, இளவரசி ஹயா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரித்தானியாவில் தலைமறைவானார்.
மேலும், முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்று பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய குழந்தைகளுக்கு தான்னையே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கின் முதல்நாள் விசாரணை நேற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் விசாரணைக்கு இளவரசி ஹயா தன்னுடைய குழுவினருடன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
குழந்தைகளை துபாய்க்கு திருப்பி அனுப்ப வேண்டுமென ஷேக் முகமது விண்ணப்பித்துள்ளார். மேலும், இந்த ஆணையின் விவரங்களை வெளியிட கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க வேண்டுமெனவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் துபாய் அரசரின் இரண்டாவது கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரித்தானிய அரசாங்க வலைத்தளத்தின்படி, ‘கட்டாய திருமண அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்’ ஒருவரைப் பாதுகாப்பதற்காகவும், அவர்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.