சிறுவன் ஒருவனையும் அவன் தாயையும் ஓடும் ரயில் முன் தள்ளி விட்ட நபர், சுவிட்சர்லாந்தில் ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதும், அவரது குடும்பம் முழுவதையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஜேர்மனிக்கு ஓடி வந்ததும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் 40 வயதான Habte A. என்று அழைக்கப்படும் அந்த நபர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், அவர் சுவிட்சர்லாந்தில் 13 வருடங்களாக வசித்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் அவர் சூரிச் போக்குவரத்து துறையில் ட்ராம் பழுது பார்ப்பவராக வேலை செய்து வந்துள்ளார்.
திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான Habte, இந்த ஆண்டு துவக்கத்தில் மன நல சிகிச்சைக்குட்பட்டதாகவும், சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Habte நடந்து கொண்ட விதம் தங்களுக்கே ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளதாகவும், இதுவரை அவர் அப்படி முரட்டுத்தனமாக நடந்துகொண்டதில்லை என்றும் அவரது மனைவியும் அயலகத்தார் ஒருவரும் தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்குமுன் பேஸலிலிருந்து ஃப்ராங்பர்ட்டுக்கு ரயில் ஏறியதாக தெரிவித்துள்ள Habte, தான் எதற்காக அந்த பெண்ணையும் அவரது மகனையும் ஓடும் ரயில் முன் தள்ளினார் என்பது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை.
திங்களன்று ரயில் முன் தள்ளப்பட்ட அந்த பெண், ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள இடத்தில் பதுங்கியதால் உயிர் தப்பினார் என்றாலும், அவரது மகன் மீது ரயில் ஏறியதில் அவன் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
இதனால் Habte மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள Habteக்கு மன நல பிரச்சினைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முறைப்படி விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் Habteக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.