ஏற்கனவே அரச உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக் கொண்டு, வேலையற்ற பட்டதாரிகளிற்கான அரச நியமனத்திலும் உள்வாங்கப்பட்ட 104 பேர் சிக்கியுள்ளனர். ஏற்கனவே அரச பணியிலுள்ள விபரத்தை மறைத்து, பட்டதாரிகள் நியமனத்திலும் அவர்கள் அரச பணி பெற முயற்சித்துள்ளனர்.
நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இன்று (1) அரச நியமனம் வழங்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் 1,250 பட்டதாரிகள் இதில் நியமனம் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் 104 பேர் ஏற்கனவே அரச உத்தியோகத்தர்களாக பணபுரிவது கண்டறியப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 4ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களில் 1250 பேருக்கே இன்று நியமனம் வழங்கப்படுகிறது.
அரச உத்தியோகத்தர் ஒருவர், கடமையிலிருந்து கொண்டு இன்னொரு அரச நியமனத்தை பெறுவது தண்டனைக்குரிய குற்றம். முன்பு பணியாற்றும் அரச தொழிலை மறைத்து புதிய தொழிலை பெற்றமை கண்டறியப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார். இரு அரச பதவிகளுமே இழக்கப்படும். முதல் அரச பணியாற்றிய காலத்தில் பெற்ற சம்பளம் முழுவதும் மீளச் செலுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஏற்கனவே பதவியில் இருந்து கொண்டு, இன்று நியமனம் பெற முயற்சித்த 104 பேரும், இன்றைய நியமன பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.