இலங்கையில் இன்று முதல் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் இலவச உள்வருகை வீசா வழங்கும் புதிய நடைமுறை அமுலாக்கபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் 48 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் நடைமுறையை சுற்றுலாத்துறை அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை பல மடங்கு அதிகரிக்கலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அதற்கமைய 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 6 மாதங்களுக்கு புதிய வீசா நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் மேலும் அதனை பல நாடுகளுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிகபட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காக இந்த வீசா வசதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய நடைமுறை தொடர்பான அறிமுக நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட ,பிரதானமாக இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.