மட்டக்களப்பு சம்மாந்துறை நிந்தவூர் பிரதேசத்தில், பிறந்து 10 மாதங்களேயான பச்சிளம் பாலகர்கர்களிற்கு நேர்ந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த தாய், சில வருடங்களாக மன நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகளை படுகொலை செய்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த தாய்க்கு ஆண் குழந்தையொன்று கிடைக்கப்பெற்று கடந்த வருடம் அக்குழந்தை சலவை இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்ததன் குறித்த தாய் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எதுவும் அறியாத பச்சிளம் பாலகர்கர்களிற்கு நேர்ந்த இந்த சம்பவம் ஜீரணிக்க முடியாததாக இருக்கின்ற அதேநேரம், தான் பெற்ற குழந்தைகளையே படுகொலை செய்யத் துணிந்த அந்தத் தாய் எந்தளவு தூரம் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்திப்பார் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது.
இதற்கு முன்னர் பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் அது வெற்றியளிக்காத நிலையிலேயே இறுதியாக குழந்தைகளை கொன்றுவிடத் தீர்மானித்ததாகவும் அவர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மன அழுத்தம் என்பது அதிகரித்து வரும் கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரும் ஆபத்து என்றும், உலக சுகாதார திணைக்களத்தின் தரவுகளின்படி இலங்கையில் 8 இலட்சம் பேர் இவ்வாறு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டுப் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் இலங்கையர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 40 வீதத்தினர் மாத்திரமே தமது நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஆண்களை விடப் பெண்களே அதிகம் மன நோயினால் பாதிக்கப்படுகின்றதாகவும், மன அழுத்தத்தின் உச்சக்கட்டமே கொலை, தற்கொலை போன்ற நிலைகளுக்கு இட்டுச் செல்கிறதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய உள சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் சித்ரமாலீ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் வருடாந்தம் 3000 பேர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.