உலகின் மிகப்பெரிய காலர் ஐடி செயலியான ட்ரூகாலர்-ல் சீட்டா மொபைல் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தனிநபரின் குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாட்டின் காரணமாக நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட ஆபத்து உள்ளது.
100 மில்லியன் பயனாளர்களின் நிலை
சீட்டா மொபைல் நிறுவனம் அதன் அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், ட்ரூகாலர் அதன் பயனர்களுக்கு அடையாளங்களை ஒதுக்குவதற்கு அவர்களது சாதனத்தின் IMEI எண்ணை பயன்படுத்துகிறது. அதாவது ஒரு மொபைல் சாதனத்தின் IMEI எண்ணை அணுக முடிகின்ற எவரும் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன் மோசடி செய்ய முடியும்.
இந்த பாதுகாப்பு குறைபாட்டை தவறாக பயன்படுத்துவதன் மூலம் “கணக்கு பெயர், பாலினம், மின்னஞ்சல், சுயவிவரப் படம், வீட்டு முகவரி” போன்ற விவரங்களைத் திருடவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மேலும் ஹேக்கர்களால் பயன்பாட்டு அமைப்புகளை மாற்ற இயலும், ஸ்பேம் பிளாக்கர்களை முடக்க முடியும் மற்றும் பயனர்கள் கருப்புபட்டியலை மாற்ற அல்லது நீக்க முடியும்.
ட்ரூகாலர் செயலி விரைவாக இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆராய்ந்து பிழையை சரி செய்துள்ளது. ஆனாலும் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட செயலின் சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
ட்ரூகாலர் நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த பாதிப்பின் விளைவாக இதுவரை “எந்தவொரு பயனர் தகவல்களும் சமரசம் செய்யப்படவில்லை” என கண்காணிப்பு பகுப்பாய்வு குறிப்பிடுகிறது என தெரிவித்துள்ளது.