நான் எந்த தவறும் செய்யவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என வர்த்தக, கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற ஒரு சில அரசியல்வாதிகள், அதில் ஒரு சில மதகுருமாரும் சேர்ந்து என்மீது குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வந்தார்கள்.
என்மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தம்மிடம் வந்து முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் பகிரங்கமாக அறிவித்தார்கள். அதற்கு காலக்கெடுவும் கொடுத்தார்கள். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எல்லா ஊடகங்களுக்கும் அதைச் சொன்னார்.
அப்படி இருந்தும் 30 இற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தினார்கள். சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்பட்டு சபாநாயகருக்கு பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதில் எந்தவித பயங்கரவாத குற்றசாட்டும் எனக்கு கிடையாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுடன் எந்த சம்மந்தமும் இல்லை என தெளிவாக தெரியப்படுத்திய பின்னரும், இன்னும் கூக்குரல் இடுகின்றார்கள் என்றால் அது அரசியல் வங்குரோத்து நிலை. அவர்களுடைய எதிர்கால அரசியல் நலனுக்காக இவ்வாறு செய்கிறார்கள்.
அதனால் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். அவர்களால் கொண்டு வரப்படுகின்ற எந்தவொரு பிரச்சனையையும், நம்பிக்கையில்லா பிரேரணையாக இருந்தால் அதை கூட எதிர்கொள்ளத் தயார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தங்களுடைய வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்க வேண்டும். அதன்பின்னர் எங்களுடைய கட்சி அந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதா, இல்லையா என்பதை கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும்.
நாங்கள் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்ல. எதிர்வரும் 3 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் உயர் பீடம் கூட இருக்கிறது. இதன்போது எதிர்கால ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.