கனடாவின் ஒன்ராறியோவில் நடுவிரலை காட்டிய சாரதியை நபர் ஒருவர் துப்பாக்கியால் முகத்தில் சுட்டுவிட்டு மாயமான சம்பவத்தில் பொலிசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார்,
தொடர்புடைய வாகனத்தை பறிமுதல் செய்ததாகவும், ஆனால் துப்பாக்கியால் சுட்ட நபரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு 10,000 கனேடிய டொலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று 21 வயதான இளைஞர் தமது Volkswagen காரில் குடியிருப்பில் இருந்து பணியிடத்திற்கு கிளம்பியுள்ளார்.
கனடா நேரப்படி மாலை நாலு மணியளவில் ராயல் கிரசண்ட் மற்றும் வெக்ஸ்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் வைத்து Chevrolet Cruze சாரதி ஒருவர் கண்மூடித்தனமாக இவரைக் கடந்து செல்ல முயன்றுள்ளார்.
இதில் அந்த 21 வயது இளைஞர் கோபத்தில் தமது நடுவிரலை அந்த சாரதிக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சாரதி, துப்பாக்கியால் இந்த இளைஞர் மீது சுட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மாயமாகியுள்ளார். அந்த இளைஞர் மீது எந்த தவறும் இல்லை என்றும், குறித்த சாரதி கண்மூடித்தனமாக தமது வாகனத்தை செலுத்தியதாக அப்போது அங்கிருந்த பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இதனிடையே முகத்தின் இடப்பக்கம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடந்த நான்காவது நாள், பொலிசார் அந்த வாகனத்தை மீட்டுள்ளனர். ஆனால் இதுவரை அந்த சாரதி கைது செய்யப்படவில்லை.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் வெளியேறினாலும், இதுவரை பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தேடப்பட்டுவரும் குற்றவாளி சுமார் 20 வயது நபர் எனவும் சராசரி உடலமைப்பும் கொண்டவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சன்மானமானது உறுதியான தகவல்களுடன் பொலிசாரை நாடும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.