முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன.
இந் நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அபகரிப்பு நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சரணாலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களுடைய அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான கோட்டைக்கேணி, குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், அம்பட்டன் வாய்க்கால், பணம்போட்ட கேணி, வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்கள் பார்வையிடப்பட்டது.
அதேபோல் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக குளங்களான சின்னக்குளம், ஊரணிக்குளம் மற்றும் அந்தக் குளங்களின் கீழான விவசாய நிலங்கள் என்பனவும் பார்வையிடப்பட்டன.
மேலும் இவ்வாறு அபகரிப்பு நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் இவ் அபகரிப்பு நிலங்கள் தொடர்பில் உரிய இடங்களில் தெரியப்படுத்துவதாக அந்த மக்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இதில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.