புதுக்கோட்டையில் ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயதுடைய முதியவருக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் அஸரப் அலி (68). இவர் தனது வீட்டு பக்கத்து வீட்டுக்காரரின் ஏழு வயது சிறுமியான வித்யாவை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாக கூறி கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாது சிறுமியிடம் இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனை அறிந்து, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அஸ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது அங்குள்ள புதுக்கோட்டை மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது இன்று மீண்டும் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அஸ்ரப் அலிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.