வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்.மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக அவை இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு , கால அவகாசம் வழங்கிய பொதுசுகாதார அதிகாரிகள், இந்நிலை தொடருமாயின் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில்ஆளுநரின் தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் 21 பேர் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்ட்டுள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கையானது நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு, மக்களின் நலன்கருதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.