மனைவியை இன்னொரு தாயாக நினைத்து வாழும் கணவரெல்லாம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். எப்பேற்பட்ட முரடணுக்குள்ளும் ஒரு அன்பானவன் இருக்கத் தான் செய்வான். அவரை நாம் எப்படி வெளியில் கொண்டு வருகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
பாசத்திற்கும் அன்புக்கும் அடங்காத ஜீவன்கள் இருக்க முடியுமா ?
பொதுவாக இந்தக் கேள்விக்கு ஆண்களை உதாரணமாக சொல்ல முடியும். முரட்டுத் தனமான தோற்றத்தைப் போலவே மனமும் முரட்டுத் தனமாகத் தான் இருக்கும்.
சிரிக்கவும் மாட்டார், அழுகவும் மாட்டார்
கல்யாணத்திற்கு முன் உள்ள ஆண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது மிகவும் எளிதானது. ஆனால் திருமணத்திற்கு பிறகான ஆண்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சாதரணமான செயல் அல்ல. அவரை நீங்கள் சிரித்தே பார்த்திருக்க முடியாது. அழுதும் பார்த்திருக்க முடியாது. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்யும் கலவையாகத் தான் தோற்றமளிப்பார்.
கணவரின் சந்தோசம் முக்கியமல்லவா
குடும்பம் சுழல வேண்டுமானால் கணவர்கள் நிச்சயம் சுழல வேண்டும். அந்த சுழற்சி நின்று போனால் குடும்பம் சந்தோசமாக இருக்காது. பணம், தொழில், வேலை, குடும்பம், உறவினர் இப்படி எண்ணற்ற வழிகளில் உங்கள் கணவர் மன அழுத்தங்களைச் சந்திக்கிறார். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய குடும்பம் ஆரோக்கியமானதாக இருக்க முடியும். மனைவியைத் தவிர கணவர் யாருடைய பாராட்டுக்களையும் எதிர்பார்க்கமாட்டார்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்
ஊக்கமும் பாராட்டும் எல்லா சூழ்நிலைகளிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாழ்வை வெறுத்து தற்கொலைக்குச் சென்ற பலரையும் தூக்கி நிறுத்தியிருக்கிறது. என்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது என் மனைவி தான் என எத்துனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். உங்கள் கணவரின் மாபெரும் வெற்றிக்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டுமா? கீழே உள்ள வழிகளைப்பின்பற்றுங்கள்.
கணவருடைய கனவின் மீது நம்பிக்கை வையுங்கள்
கணவர்கள் மனதிற்குள் என்ன வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. குடும்பத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கனவுகளை கொன்று புதைக்கும் கணவர்கள் தான் அதிகம்.கணவரின் கனவின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக உங்கள் கணவரிடம் உறக்கச் சொல்லுங்கள். உங்களுடன் நான் இருப்பதாக தோளில் தட்டி நம்பிக்கை அளியுங்கள்.
நீங்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்கள்
எப்ப பார்த்தாலும் அது இல்லை இது இல்லை என எதிர்மறையாக பேசாதீர்கள். அவர் வீட்டிற்குள் வரும்போது சிறு புன்னகையோடு வரவேற்று அமர வையுங்கள். எப்போதாவது உங்கள் செல்ல கரடிக்குட்டி கணவரை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள். இது அத்தனையும் உங்கள் கணவர் உங்களை சந்தோசமாக வைத்திருப்பதாக அவருக்கு நீங்கள் தரும் செய்தி. ஒரு வாரம் செய்துப் பாருங்கள் தொடர்ச்சியாக வேலைப் பளு இருந்தாலும் புன்னகையோடே வீட்டுக்குள் வருவார்.
அத்துணை அழகா இருக்கீங்க
உங்கள் கணவன் கண்ணாடி முன் நின்று தன் அழகை சரிபார்ப்பதை விட மனைவிகள் முன்னிலையில் தான் நிற்பார்கள். பாச வார்த்தைகளால் என் புருசா இன்னைக்கு கொஞ்சம் அழகாத் தான் இருக்கீங்க… நீங்கள் சொல்வது பொய் என உங்கள் கணவருக்குத் தெரியும். ஆனாலும் சொல்லிப் பாருங்களேன். ஏன் இவ்ளோ நாளா அழகாத் தெரியலையா என்ற வகையில் உரையாடல் நகரும். அது பேரின்பத்தைத் தரும்.
நான் நானாகவே உணருகிறேன்
தன்னை யாரும் அடக்கி ஆளக்கூடாது என நினைப்பவர்கள் தன் மனைவியும் தன்னால் அடக்கி ஆள விரும்பமாட்டார்கள். இந்த தயக்கம் உங்கள் கணவருக்குள் இருந்துக் கொண்டே இருக்கும். நான் நானாகத் தான் வாழ்கிறேன் என்று அவருக்கு அடிக்கடி உணர்த்துங்கள். பிறந்த வீட்டில் இருப்பதை விட சுதந்திரமாக இங்கு இருப்பதாக தெரிவியுங்கள்.
உன் மேல் சாய்ந்து இருப்பதையே விரும்புகிறேன்
உங்கள் கணவன் விடுமுறை நாட்களில் இருக்கும் போது பல்லி போல் அவருடன் ஒட்டிக் கொள்ளுங்கள். தேவையான போது முத்தங்களை பரிசாக அளியுங்கள். அவரை உங்களை விட்டு நகர அனுமதிக்காதீர்கள். அது அவருக்காக நீங்கள் ஒதுக்கிய நாள் என்பதை புரிய வையுங்கள்.
என்னுடைய வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான்
அப்பாவை விட அன்பான பாசமான கணவர்கள் கிடைத்தும் அவரை பாராட்டுவதில் அவ்வளவு ஓரவஞ்சனைக் காட்டாதீர்கள். ஒரு குழந்தையைப் போல் எல்லாத் தருணங்களிலும் தாங்கிய அவருக்கு உங்களால் தான் என் வாழ்க்கை முழுமை பெற்றது என்ற ஒற்றை வார்த்தையை சொன்னால் தான் என்ன? அது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் தெரியுமா?
முழுமையாக நம்புங்கள்
உங்கள் கணவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைத் தான் அவரால் முடியாத காரியங்களையும் செய்ய வைக்கும். அவர்மீது நீங்கள் நம்பிக்கையை இழக்கிறீர்கள் என்றால் அவர்களையே இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சூப்பர் குக்
உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது அரும்பாடு பட்டு சமைத்துக் கொடுத்திருப்பார். அதன் சுவைக் குறித்து அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கலாம். அந்த உணவு சுவையாக இல்லாவிட்டாலும் உங்கள் மனதுக்கு அவர் அளித்த மருந்துக்காவது அவரை சூப்பர் குக்காக ஏற்றுக்கொண்டு வாழ்த்துங்கள்.
அவரின் இயல்பை காதலியுங்கள்
அவர் அணிந்திருக்கிற உடையோ, உடைமைகளோ அவருடைய முடிவெட்டோ உங்கள் மீது அவர் வைத்திருக்கும் காதலை தீர்மானித்து விடாது. எனவே அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரைக் காதலியுங்கள்.
அவர் தான் எல்லாமே
எல்லாச் சமயங்களிலும் அவர் உங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார். எல்லாத் தருணங்களிலும் உங்களுக்காக உழைப்பதற்காக ஒரு சிறிய பாராட்டைத் தெரிவியுங்கள். அதனால் உங்கள் கணவரின் முகத்தில் ஏற்படுகிற சிறு புன்னகை அலாதியானது.