சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்கு இரண்டு வழி முறைகள் உள்ளன.
1. முதலாவது சாதாரண அல்லது வழக்கமான முறை, இதைத்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது எளிமைப்படுத்தப்பட்ட வழி முறை.
பொதுவாக இது சுவிஸ் குடிமக்களின் (பதிவு செய்யப்படாத) கணவன் அல்லது மனைவி மற்றும் சுவிஸ் குடிமக்களின் பிள்ளைகளும், 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்களும் பயன்படுத்தும் முறை.
சுவிஸ் குடிமக்களின் கணவன் அல்லது மனைவிக்கு பயன்படுத்தப்படும் இந்த இரண்டாவது வழிமுறையை பயன்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்டவருக்கு திருமணமாகி குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியிருப்பதோடு, அவர்கள் சுவிட்சர்லாந்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.
2. ஒரு வெளிநாட்டவர் சாதாரண முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு மூன்றடுக்கு தேவைகளை சந்திக்க வேண்டும்.
அதாவது உள்ளூர் மட்டம், மாகாண மட்டம் மற்றும் மாகாண கூட்டமைப்பு மட்டம்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி பெடரல் வெளிநாட்டவர்கள் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் குறைந்தது 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும் (முன்பு இது 12 ஆண்டுகளாக இருந்தது).
அவர் தனது பதின்ம வயதில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தாலோ அல்லது C உரிமம் வைத்திருந்தாலோ பத்தாண்டுகளுக்கும் குறைவாக வாழ்ந்திருந்தாலும் போதுமானது.
3. நீங்கள் சமீபத்தில் சலுகைகளைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
2018இல் கொண்டு வரப்பட்ட இன்னொரு மாற்றம் என்னவென்றால், நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகள் அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பீர்கள் என்றால், (நீங்கள் அந்த தொகையை திருப்பிக் கொடுத்தாலொழிய) நீங்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது.
4. நீங்கள் சுவிஸ் மாகாணம் ஒன்றில் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது மற்றொரு முக்கிய விடயமாகும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் 10 ஆண்டுகள் கூட வாழ்ந்திருக்கலாம், ஆனால் ஒரு மாகாணத்தில் நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியம்.
மாகாணத்திற்கு மாகாணம் விதிகள் மாறும் என்றாலும் எல்லா மாகாணத்திலுமே இந்த ஒரு விடயம் கருத்தில் கொள்ளப்படும்.
5. சுவிஸ் குடியுரிமை பெற நல்ல மொழித்திறமை அவசியமாகும்.
ஆனால் அது எந்த அளவுக்கு என்பது மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். 2018 சட்ட மாற்றங்களுக்குப் பிறகு, குறைந்த பட்ச மொழித்திறன் அவசியம். பொதுவாக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் A2 மட்டத்திற்கு எழுதவும் B1 மட்டத்திற்கு பேசவும் அறிந்திருக்க வேண்டும்.
6. மாகாண மற்றும் உள்ளூர் விதிகளும் மாறுபடும்.
ஒவ்வொரு மாகாணத்திற்குமான தேவைகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பொதுவாக அவை, நீங்கள் வாழும் சமுதாயத்தோடு நீங்கள் எவ்வளவு ஒன்றிணைந்து வாழ்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக இருக்கும்.
7. நீங்கள் சுவிட்சர்லாந்தைப் பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம்.
உதாரணமாக உங்கள் மாகாணத்தில் எத்தனை ஏரிகள் உள்ளன? பொது விடுமுறைகள் எவை? உள்ளூர் பாரம்பரியம் மற்றும் விழாக்கள் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
8. எதுவும் உடனடியாக நடந்துவிடாது.
நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அது அமையும், அதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து வைத்திருங்கள்.
9. குடியுரிமை பெறுவது காஸ்ட்லியான விடயமாக அமையலாம்.
மூன்று மட்டங்களில் நீங்கள் அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், மூன்று விதமான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
மேல் மட்டத்தில் உங்களுக்கான கட்டணம் வெறும் 50-150 சுவிஸ் ஃப்ராங்குகள்தான் என்றாலும், மற்ற கட்டணங்கள் அதிகம் இருக்கலாம்.
உள்ளூர் மட்ட கட்டணம் 500 முதல் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், மாகாண மட்டத்தில் கட்டணம் 2,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரையும் இருக்கலாம்.
10. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுவது நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையலாம்.
மற்ற பகுதிகளைக் காட்டிலும் மேற்கு சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது சற்று எளிதாக இருக்கும்.
11. சுவிட்சர்லாந்து இரட்டைக் குடியுரிமைக்கும் அனுமதியுண்டு.
சுவிஸ் குடிமக்கள் இரண்டு பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். உண்மையில், ஆறில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.
அதாவது, நீங்கள் வைத்திருக்கும் இன்னொரு குடியுரிமை எந்த நாட்டுடையதோ, அந்த நாடு இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொள்ள மறுத்தாலொழிய, நீங்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதில் சுவிட்சர்லாந்துக்கு எந்த பிரச்சினையுமில்லை.