எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் தேசிய நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பான தண்டப்பணத் தொகை பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பான தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் ஒருவகையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விசேடமாக ஏழுவகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது அதற்கமைய காப்புறுதியின்றி வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தல், மதுபோதையில் வாகனம் செலுத்தல், இடதுபக்கமாக வாகனத்தை முன்னோக்கி செலுத்தல், அனுமதிக்கப்பட்ட வேகத்தை பார்க்கிலும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தல், புகையிரத கடவை ஊடாக கவனயீனமாக வாகனத்தை செலுத்தல் மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தை கொண்டு செல்லல் ஆகிய ஏழுவகையான குற்றங்களுக்கே இவ்வாறு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் போக்குவரத்துத்துறை சார் தொழிற்சங்கங்களும் கடந்த திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த தண்டப்பண அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணமானது 2500 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அடுத்தவருடத்திற்கான வரவு–செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
வரவு–செலவுத்திட்டத்தின் குறித்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துத்துறை சார் தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானித்திருந்தன.
எனினும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டிருந்தது.
அதன்பின்னர் நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு ஏழுவகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டப்பணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
தற்போது இந்தத் தீர்மானமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து பாரிய விமர்சனங்களும் எதிர்ப்பு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருசில தரப்பினர் வரவேற்றுமிருக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன அதிகரிக்கின்ற விபத்து சம்பவங்களையும் விபத்துக்களினால் நிகழ்கின்ற உயிரிழப்புக்களையும் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
அதாவது வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அல்லது வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வினைத்திறனான திட்டமாகவே 25000 தண்டப்பண அறிவிப்பை பார்க்கிறோம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்துடன் இலங்கையில் ஒரு நாளைக்கு 7 பேர் வாகன விபத்தினால் இறக்கின்றனர். 30 வாகன விபத்துக்கள் ஒரு நாளில் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது 100 பேர் வரையில் காயமடைகின்றனர். வருடத்துக்கு நோக்கும் போது 23000 வாகன விபத்துக்கள் ஏற்படுவதோடு சுமார் 2400 பேர் இறக்கின்றனர்.
இவ்வாறான மிகவும் பயங்கரமான சூழல் இலங்கையில் காணப்படும் போது வீதி பாதுகாப்பு சட்டதிட்டங்கள் கண்டிப்பாக பேணப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர்லக் ஷ்மன் யாப்பா அபேவர்த்தன எடுத்துரைத்திருக்கிறார்.
மேலும் நாம் சமூகத்தின் நன்மையை இலக்காக கொண்டு செயற்படுத்தும் விடயங்களை இவ்வாறு மக்களுக்கு தவறான வகையில் கொண்டு செல்ல கூடாது. குறித்த நடைமுறைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நடைமுறையை மாற்றுமாறு கோருவோர் சமூகத்தின் நலனுக்காக அதனைக் கூறுவதாக கருதமுடியாது. இந்நடைமுறை வினைத்திறன் கொண்டது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் அதிகரித்து செல்லுகின்ற போக்குவரத்து விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறு தண்டப்பணம் விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு தண்டப்பணத்தை அதிகரிப்பதன் ஊடாக மட்டுமே விபத்துக்களை, அதனால் ஏற்படுகின்ற உயிர் சேதங்களையும் குறைத்துவிட முடியுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது.
குறிப்பாக போக்குவரத்து துறைசார் சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியும் எனவும் இதுபோன்று தண்டப்பணத் தொகையை அதிகரிப்பதன் ஊடாக ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் ஒருசில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறெனினும் வகைப்படுத்தப்பட்டுள்ள ஏழு போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்களுக்கான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை பொதுவான வகையில் மக்கள் மத்தியில் விசனத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதனூடாக அரசாங்க அதிகாரிகள் ஊழல் மோசடியில் ஈடுபடும் சந்தர்ப்பமே அதிகரிக்கும் எனவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களின் வருமான மட்டங்களை கருத்தில் கொண்டே இவ்வாறு தண்டப்பணத் தொகையை நிர்ணயிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அதாவது ஒருவரின் மாதாந்த வருமானம் 25 ஆயிரம் ரூபாவாக இருக்கும் போது அவர் ஒருமுறை இவ்வாறு விதிமுறை மீறலுக்கு சிக்கிவிட்டால் அவரது மாத வருமானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
அதுமட்டுமன்றி இரண்டு வாகனத்தை வைத்திருக்கும் ஒருவர் தவறுதலாக ஏனைய காப்புறுதிப்பத்திரத்தை எடுத்துக்கொண்டு மற்றைய வாகனத்தை செலுத்தும்போது அவர் இவ்வாறு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றார்.
இவை எதிர்பாராதவிதமாக நடைபெறும். தவறாக இருப்பினும் பாதிக்கப்படுகின்றவர் பாரிய தொகையை செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
இவை தொடர்பில் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதுடன் மக்களின் வருமான மட்டத்துடன் ஒப்பிட்டே தண்டப்பணங்களை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எது எப்படியிருப்பினும் நாட்டில் அதிகரித்து செல்கின்ற வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களை தடுப்பதற்கு அரசாங்கம் பரந்துபட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்போது அதனை எழுந்தவாரியாக குறை கூறி விட முடியாது. குறிப்பாக நாட்டில் தினமொன்றுக்கு ஏழு அல்லது எட்டுப்பேரின் உயிர்களை பறிக்கும் வகையில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
அதுமட்டுமன்றி வீதியில் நடந்து செல்கின்ற மற்றும் மஞ்சள் கடவைகளை கடக்கின்ற பாதசாரிகள் என்போரும் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
அத்துடன் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதாலும் மிக வேகமாக செலுத்துவதாலுமே அதிகமான விபத்து சம்பவங்கள் பதிவாகின்றன.
எனவே, இந்த வகையில் விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சட்ட திட்டங்களை தீவிரப் படுத்துகின்றமையை குறைகூற முடியாது.
ஆனால் மக்களின் வருமான மட்டங்களுடன் ஒப்பிட்டு தண்டப்பணத்தை நிர்ணயிப்பது சிறந்ததாக இருக்கும். காரணம் தண்டப்பணத்தை அதிகரிப்பதன் ஊடாக மட்டும் விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்திவிட முடியாது.
விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு சட்டம் உரிய முறையில் நடை முறைப்படுத்தப்படுவதே அவசியமாகும்.
அதுமட்டுமன்றி வாகனத்தை செலுத்துபவருக்கும் மக்களும் போக்குவரத்துசார் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
அவ்வாறில்லாமல் வெறுமனே தண்டப் பணத்தை மட்டும் அதிகரிப்பதன் ஊடாக இவ்வாறு விபத்துக்களை குறைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
விசேடமாக மேற்கு நாடுகளில் போன்று மிகவும் முன்னேற்றகரமான போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை உரிய முறையில் செயற்படுத்துவதன் ஊடாகவே அதிகரிக்கின்ற விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.
இது தொடர்பிலேயே பரந்துபட்ட ரீதியில் கவனம் செலுத்தப்படவேண்டும். இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.