அது ஒரு மலைக்கோவில். சிவதலமான அந்த மலையின் மீது ஏறி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் குகை போன்ற ஒரு புதர் இருந்தது. அதில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது ஒரு கால் மடக்கி வைக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு கால் துண்டிக்கப்பட்டு பாதையிலும் வீசப்பட்டிருந்தது. துண்டிக்கப்பட்டுக் கிடந்த காலையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. அவரிடம் தன்னுடைய கால் போனதற்கான பரிதவிப்போ, பதற்றமோ எதுவுமே இல்லை.
முதியவர் பதற்றத்துடன் அந்த துறவியைப் பார்த்து, கால் துண்டிக்கப்பட்டிருப்பதற்காக காரணத்தை வினவினார்.
‘ஐயா! நான் இந்த ஈசனை நினைத்து தியானிப்பவன். இன்றும் அதே போல் தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இந்த வழியாக ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய உருவம் என் மனதைக் கவர்ந்தது. அவளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்று என் மனதில் எண்ணம் ஏற்பட்டது. என்றைக்கும் ஏற்படாத அந்த ஆவலை கட்டுப்படுத்த எண்ணாத நான், அந்த பெண்ணைப் பார்ப்பதற்காக உடனடியாக எழுந்தேன். என் இருப்பிடத்தில் இருந்து ஒரு காலை வெளியே எடுத்து வைத்தேன். நல்ல காலத்திற்கு அடையாளமாக அப்போது என் மனதில் வேறொரு எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணம் என் மனசாட்சியாக என்னிடம் பேசியது. ‘ஏ.. போலித் துறவியே! உனக்கு வெட்கமாக இல்லையா? 30 ஆண்டுகளாக தனிமையில் இருந்து தவம் செய்து வந்த நீ, இப்போது காமத்தின் வலையில் விழத் துணிந்து விட்டாயே..’ என்று ஏளனம் செய்தது.
மனசாட்சியின் வார்த்தை என் உடலை நடுங்கச் செய்தது. என்னைக் கண்டு எனக்கே அருவெறுப்பாக தோன்றியது. ஒரு பெண்ணைக் கண்டதும், அவளைக் காண எழுந்து போக உதவிய காலைத் துண்டித்தேன். பின்பு அதை பாதையில் வீசி எறிந்தேன். இப்போது என் மனம் நிம்மதியாக உள்ளது.
இதுவும் இறைவனின் லீலைகளில் ஒன்றுதான் என்று எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை தடுத்தாற்கொண்ட கருணையை எண்ணி மனதில் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்றார் துறவி.
அதைக் கேட்டதும் முதியவர் மறைந்து அந்த இடத்தில் சிவபெருமான் தோன்றினார். ‘துறவியே.. உன்னுடைய மனதில் வலிமையைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. உன்னுடைய தவத்தை தொடர்ந்து செய்து, இறுதியில் என்னை வந்து அடைவாயாக…’ என்று கூறி மறைந்தார்.
இறைவனின் கருணையால் துறவிக்கு மீண்டும் கால் சரியானது. பக்தனுக்கு அருளிய பரமனின் உள்ளத்தை எண்ணி மகிழ்ந்தவாறே, தியானத்தில் மூழ்கினார் துறவி.