அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் துரோகி, பாஜக இரண்டாவது துரோகி என பகிரங்கமாக எதிர்த்தார்.
அவருடைய எதிர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, வைகோ நேரத்திற்கு ஏற்றாற்போல் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார். மேலும் அவரை தொடர்ந்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், கள்ளத் தோணி நாயகர் என்ற பட்டத்தில் இருந்து தற்போது துரோகி நம்பர் ஒன் என்ற பட்டத்திற்கு வைகோ உயர்ந்துள்ளார் என விமர்சித்துள்ளார்.
தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைகோ காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தயவால்தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார் என்பதை மறந்து விட்டார் எனவும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் காங்கிரசுக்கு எதிராக பேசிவரும் அவர்தான் நம்பர் ஒன் துரோகி எனவும், அரசியல் அனாதையாக இருந்த அவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்து அவருக்கு கணேசமூர்த்தி என்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினரும் வழங்கியது எங்கள் கூட்டணி தான் எனவும், அதை மறந்துவிட்டு தற்போது காங்கிரஸ் கட்சியை துரோகி என அவர் விமர்சனம் செய்வது நன்றாக இல்லை எனவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து, ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி இனத்துரோகி கட்சி எனவும், காங்கிரஸ் தயவில் ஒருபோதும் நான் எம்பி ஆனது இல்லை எனவும், தற்போது ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்களால் மட்டுமே நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் கலைஞர் கருணாநிதி அவர்களால் தான் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி ஒரு இனத்தையே அழித்த பாவிகள் கட்சி எனவும், அற்ப புத்தி உள்ளவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற விரும்பவில்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைகோ – அழகிரி மோதல் குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.