பிரான்ஸ் வாழ் தமிழர்களால் பிரான்ஸிலுள்ள பிரபல திரையரங்கம் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் பல லட்சம் ரூபாய் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தால் இனி பிரான்ஸ் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிட படுமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கை அஜித் ரசிகர்கள் சேதப்படுத்தியதால் அந்தப் பகுதி விநியோகஸ்தருக்குக் கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸ். இங்கு படங்கள் திரையிடப்படுவது ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது. ‘சர்கார்’, ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்பட்டன. இந்த வாரம் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் அங்கு திரையிடப்பட்டுள்ளது.
படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இதனால் அந்தத் திரை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து திரையை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. அவர்களும் இணங்கியுள்ளனர்.
மேலும் இனி லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் எந்த தமிழ்ப் படமும் திரையிடப்பட மாட்டாது என்றும் தெரிகிறது. ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து, பிரான்ஸ் விநியோகஸ்தர்கள் அமைப்பான EOY என்டர்டெய்ன்மென்ட், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கே இது அவமானம் என்கிற ரீதியில் பலரும் இந்தச் செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் கிடைத்த வாய்ப்பை விடாமல் அஜித் ரசிகர்களைக் கலாய்த்துப் பதிவிட்டு வருகின்றனர்.