ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தில் பலமாக தாக்கி அவர் மைதானத்திலே சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
77வது ஓவரில் இங்கிலாந்து வீரர் ஆரச்சர் 150 கி.மீ. வேகத்தில் வீசிய பந்து துடுப்பாடிய ஸ்மித்தின் கழுத்தில் பலமாக தாக்க அவர் நிலைகுலைந்து மைதானத்திலேயே சரிந்தார்.
உடனே மைதானத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர், ஸ்மித்திற்கு முதலுதவி அளித்து பெவிலியனுக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, அவுஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் வெளியேறிய, மீண்டும் களமிறங்கிய ஸ்மித் 92 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
துடுப்பாட்டத்தின் போது பந்த தாக்கியதில் ஸ்மித்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிய முன்னெச்சரிக்கையாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மித்தின் நிதான ஆட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.