பிரிவினைகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தல் நாள் உரையில் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி தெரிவித்தல்நாள்
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 4-ம் வியாழக்கிழமை, நன்றி தெரிவித்தல் நாளாக கொண்டாடப்படுகிறது.
நமது நாட்டின் தைப்பொங்கல் போன்று இதுவும் ஒரு அறுவடைத்திருநாள் ஆகும். வட அமெரிக்க பாரம்பரியத்தில் வந்த இந்த நாள், அங்கு தேசிய விடுமுறை தினம்.
அரசியல் பின்னணியில் பார்த்தால், இந்த விழா மக்களிடையே நல்லுறவை வளர்க்க பயன்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், நாட்டு மக்களுக்கு வீடியோவில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
மகத்தான நாடாக…
அந்த செய்தியில் அவர் கூறி இருப்பதாவது:-
வரலாற்று சிறப்புவாய்ந்த அரசியல் பிரசாரம் எல்லாம் ஓய்ந்து விட்டது. இப்போது நமது நாட்டை மறு கட்டமைக்கவும், அமெரிக்கா, அனைத்து அமெரிக்க மக்களுக்கும் உரித்தானது என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மிகப்பெரிய தேசிய பிரசாரம் தொடங்குகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து விட வேண்டும். அமெரிக்காவை மறுபடியும் ஒரு மகத்தான நாடாக உயர்த்துவதற்கு ஒரே குடையின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றுசேர வேண்டும்.
இந்த நன்றி தெரிவித்தல் நாளில் எனது பிரார்த்தனையும் அதுதான்.
வரலாறு படைப்போம்
நாம் நமது பிரிவினைகளை மறப்போம். ஒரே நாடாக, ஒரே நோக்கத்தோடு வலுப்பெற்று, முன்னோக்கி நடைபோடுவோம்.
நீண்டதும், காரசாரமானதுமான அரசியல் பிரசாரம் முடிந்துள்ள நிலையில், உணர்வு கொந்தளிப்புகள் அப்படியே உள்ளன.
அவற்றை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. துரதிர்ஷ்டவசமாக அது விரைவாக போய் விடாது.
நாம் ஒன்றாக சேர்ந்து உண்மையான மாற்றத்தை வாஷிங்டனுக்கு கொண்டு வந்தும், பிற நகரங்களுக்கு உண்மையான பாதுகாப்பை கொண்டு வந்தும், நமது மக்களுக்கு உண்மையான வளத்தை கொண்டு வந்தும் வரலாறு படைப்போம். இது எனக்கு முக்கியம். இது நாட்டுக்கு முக்கியம்.
ஆனால் நாம் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க அனைவரும் உறுதி கொள்வோம்.
அடைய முடியாதது எதுவும் இல்லை
இந்த முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள அழைக்கிறேன். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவோம். அமெரிக்கா ஒன்றுபட்டிருக்கிறபோதுதான், நம்மால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.