அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கனேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது), தனது அறையில் தங்கியிருந்த முஹமது மன்சூர் என்பவரை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தியாகராஜாவுக்கு 23 ஆண்டுகள் பரோல் அல்லாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி David Lovell தீர்ப்பளித்துள்ளார்.
“இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. இருவருக்கும் இடையில் குடிப்பழக்கத்துடன் கூடிய நட்பு காணப்பட்டது. கொலைக்கு சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்ததென்றே அவரால் சிந்திக்க முடியவில்லை.
முஹமதிற்கு பின்னால் இருந்து அவர் கத்தியால் குத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள முஹமதிற்கு ஒரு சந்தர்ப்பமேனும் கிடைக்கவில்லை என்பது இந்த வழக்கு விசாரணையின் போது உறுதியாகியுள்ளது” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தியாகராஜாவுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டு உறுதியாகியுள்ள நிலையில், அவரது சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கணேஷமூர்த்தி தியாகராஜா என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று புகலிடம் கோரியவராகும். இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்திருந்த முன்னாள் சிறுவர் போராளி என்பது குறிப்பிடத்தக்கது.