மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தமிழ் பிரிவான சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் கொள்கையளவில் இணைந்து செயற்பட போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன்.
இன்று (22) யாழில் நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்பை விடுத்தார் அனந்தி சசிதரன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் கிராஸ் விடுதியில் இன்று காலை இந்த சந்திப்பு நடந்தது. அனந்தி சசிதரன், சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சில மலையக பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசினர்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அனந்தியுடன் பேசியதாகவும், அனந்தியும் தாமும் மலையக மக்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். மலையக மக்களின் பிரச்சனைகளை அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு செல்வார் என உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அனந்தி, சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் என்பவற்றுடன் கொள்கைளவில் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் தலைவராக அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.