இலங்கை ரி 20 அணியின் கப்டன் இதுவரை அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவில்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தற்போது திமுத் கருணாரத்ன தலைமைப் பொறுப்பை வகித்தாலும், இலங்கை ரி 20 அணி இன்னும் நிலையான தன்மையை பெற முடியாமல் திண்டாடுகிறது. இதற்கு அணிக்குள் உள்ள பனிப்போர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையை சேர்ந்த அதிகாரிகள் சிலர், இது குறித்த சில விடயங்களை மேலோட்டமாக ஊடகங்களிற்கு கசிய விட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 1ம் திகதி நியூசிலாந்துடனான முதலாவது ரி 20 போட்டி ஆரம்பிக்கிறது. இந்த தொடருக்காக இலங்கை அணியின் கப்டனாக லசித் மலிங்கவை நியமிக்க, தேர்வுக் குழு முன்பு திட்டமிட்டிருந்தது. எனினும், அணியிலுள்ள ஒரு பகுதி வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சில வீரர்கள், கிரிக்கெட் சபை அதிகாரிகளை நேரில் சந்தித்து இது குறித்து பேசியும் உள்ளனர்.
அணியின் ஒரு பகுதி வீரர்களின் அதிருப்தியுடன் மலிங்கவை கப்டனாக நியமிப்பது நல்லதல்ல என தேர்வாளர்கள் கருதுகிறார்கள். இதனால் ரி 20 அணியின் கப்டனாக குசல் பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்லவை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 1ம் திகதி இடம்பெறுகிறது. மூன்று போட்டிகளும் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற உள்ளன.