பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இந்த தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய நேற்றைய தினம் இந்த ஆயுதங்கள் மீட்க்கட்டுள்ளன.
ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று, அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பககிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் வெடிபொருள் 10 கிலோ, தொலைநோக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு மீட்க்கப்பட்டிருந்தன.
இதவேளை முக்கியஸ்தர்கள் மூவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், புலிகள் அமைப்பை மீள ஏற்படுத்த இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் இரு விடயங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் தீவிர விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருவதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.