சீயோன் தேவாலயத்தின் மீதான தற்கொலைதாரியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு எந்தவித அனுமதியையும் மட்டக்களப்பு மாநகரசபை வழங்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட செயதியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சீயோன் தேவாலய தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்களை புதைப்பது தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபரினால் எங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட எந்த மயானத்திலும் புதைப்பதற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்டு மாநகர ஆணையாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.அந்த கடிதத்தில் உரிய எச்சங்களை பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று அதே திகதியில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு குறித்த மனித எச்சங்களை புதைப்பதற்கான அனுமதியை கோரி ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த கடிதத்தில் நீதிமன்றத்தின் கடித பிரதி இணைக்கப்படாத காரணத்தினாலும் குறித்த குண்டுதாரியின் எச்சங்களை எமது பகுதியில் புதைப்பதற்கு அனுமதிப்பதில்லையென்ற காரணத்தினாலும் நாங்கள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இவ்வாறான எச்சங்களை புதைப்பதற்கு சபையின் அனுமதிகளைப்பெற்றதன் பின்னரே அனுமதி வழங்கமுடியும். அவ்வாறு இல்லாது மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
குறித்த குண்டுதாரியின் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இன்று நாங்கள் அறிகின்றோம்.ஆனால் அவற்றிற்கான அனுமதி மாநகரசபையினால் வழங்கப்படவில்லை.அனுமதியற்ற முறையில் பொலிஸார் அதனை புதைத்துள்ளனர்.
இது தொடர்பில் எமது சட்ட ஆலோசகரின் ஆலோசனைகளைப்பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.