முன்னாள் காதலனின் மனைவியை கொலை செய்ய முயன்ற இந்திய பெண் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த டினா ஜோன்ஸ்(32) என்கிற பெண் அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் வசித்து வருகிறார்.
லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்து வந்த டினாவிற்கு, அதே மருத்துவமனையில் வேலை செய்த திருமணமான ஒரு மருத்துவரின் மீது காதல் மலர்ந்துள்ளது.
சிறிது காலத்திற்கு பிறகு அந்த மருத்துவர் டினாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டினா, மருத்துவரின் மனைவியை கொலை செய்தால் தன்னுடைய காதல் பாதை சரியாகிவிடும் என திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக இருண்ட இணையதளத்தில் ஒரு அடியாளை ஏற்பாடு செய்து அவருக்கு 12000 டொலர்கள் பணம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மருத்துவருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது எனவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தவறான நடத்தையால் நடந்ததை போல இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை கண்டறிந்த பொலிஸார், டினாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செவ்வாய்க்கிழமையன்று நடந்த விசாரணையில் முதல் தர கொலைக்கு முயன்றதாக டினா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் டினாவிற்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.