வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றுவருகிறது.
திருவிழாவின் 24ம் ஆம் நாளான இன்று இடம்பெற்றுவரும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் முருகப் பெருமானின் அருள்பெற யாழ். நோக்கி படையெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிர்களும் கந்தனின் ஆசிபெற கடல் கடந்து வந்துள்ளனர்.
இம்முறை திருவிழாவினை முன்னிட்டு கோயிலுக்கு செல்லும் நான்கு பிரதான நுழைவாயில்களிலும் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தின தாக்குதல் காரணமாக பாதுகாப்பு கெடுபிடிகள் இந்த முறை அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 6ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து 25 நாட்கள் பல்வேறு திருவிழாக்கள் இடம்பெற்றன. மேலும் இன்றைய தேர்த்திருவிழாவைத் தொடர்ந்த நாளை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.