யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12 மணியளவில் தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர் தினம் இன்று நினைவு கூரப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மரக் கன்றுகள் நாட்டப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அறிவித்திருந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
உலகில் வாழும் ஈழத் தமிழர்கள் மாத்திரமன்றி தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவீரர் தினத்தன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.