அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இரண்டு மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் 5 பேர் பலியானதோடு, 21 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தின் அண்டை நகரங்களான மிட்லாண்ட் திரைப்பட தியேட்டர் மற்றும் ஒடெஸா ஹோம் டிப்போவில் இரண்டு மர்ம நபர்கள், உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மேலும், அப்பகுதி வழியாக சென்ற வாகனங்களின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு தியேட்டரில் இருந்த மக்கள் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானதோடு, 21க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய நபரிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.