பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிய பணக்கார நபர் 10 வருடங்களுக்கு பின் சட்டசிக்கல்களை எதிர்கொள்ள இங்கிலாந்திற்கு கொண்டுவரப்பட உள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனின் வால்டாம்ஸ்டோவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் மிச்சல்லே சமரவீரா (35) என்கிற பிரித்தானிய பெண் சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, இந்தியாவை சேர்ந்த பணக்கார தொழிலதிபரின் மகன் அமன் வியாஸ் (34) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மாணவர் விசாவில் இங்கிலாந்தில் தங்கி பயின்று வந்த அவர், இதேபோன்று ஏற்கனவே இரண்டு மாதங்களில் மூன்று கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
அவரை கைது செய்வதற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட உடனே இந்தியாவிற்கு தப்பிய வியாஸ் தில்லியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொண்டார்.
வியாஸ் 2011 ல் புது தில்லி விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு விமானத்தில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் குறைந்தது 50 முறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி, இங்கிலாந்து அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
2016 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு சம்மந்தப்பட்ட நபரை இங்கிலாந்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கட்டளையிட்டார்.
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் பிரதமர் தெரசாவிடம், இந்திய பிரதிநிதியுடன் வழக்கு குறித்து பேசுமாறு ஸ்டெல்லா அழுத்தம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் குற்றவாளி அமன் வியாஸ் 10 வருட போராட்டத்திற்கு பின் விரைவில் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.