யாழ்ப்பாணத்தில் பெண்களின் அழகை மெருகேற்றுபவர்களுக்கு யாழ் நீதிமன்றத்தில் நடந்த கதி யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிருக்கான அழகுக்கலை நிலையங்களில் பாவனைக்குதவாத காலாவதியான அழகுக்கலைப் பொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளர்கள் நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அழகுக்கலை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் பத்துக்கும் அதிகமான மகளிருக்கான அழகுக்கலை நிலையங்களில் பாவனைக்கு உதவாத காலாவதியான அழகு சாதனப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அழகுக்கலை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பாவனையாளர் அதிகார சபையினால் குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் இன்றையதினம் குற்றாவாளிகள் தாம் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு தலா 3000 ரூபா தண்டம் விதித்ததுடன்.
இனி இவ்வாறான குற்றச் செயல்கள் மற்றும் பொருட்களை தமது நிலையத்தில் வைத்திருந்தால் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடும் நிலை ஏற்படும் என யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்குமார் எச்சரிக்கை செய்து அவர்களை விடுதலை செய்தார்.