வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் ஷா(45) என்பவர், 14 மாத போராட்டத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் திகதியன்று உயிரிழந்தார்.
அவருக்கு கெய்லி என்கிற மனைவியும் மற்றும் எமிலி (11), ரூபி (9) மற்றும் ஆறு வயது இரட்டையர்கள் சார்லோட், ஐசக் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கிறிஸ் ஷாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி பர்ன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் கிறிஸ் ஷா குடுபத்தினருடன், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அவருடைய மனைவி கெய்லி கூறுகையில், எங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பர்ன்ஸ் கடற்கரை மிகவும் பிடிக்கும். நாங்கள் அந்த கடற்கரையில் தான் எங்களுடைய நேரத்தை செலவிடுவோம்.
2017ம் ஆண்டு என் கணவருக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஹீமோதெராபி சிகிச்சை பெற்று 2018ம் ஆண்டு குணமடைந்தார். நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நான்கு மாதங்கள் கழித்து புற்றுநோய் எலும்புகள் என உடலின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது தெரியவந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால் அவர் அடுத்த ஆறு வாரங்களுக்கு உயிருடன் இருந்தார். நான்கு வாரங்கள் மருத்துவமனையில் கழித்த பிறகு, வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் புறப்பட்டோம்.
பாதி வழியில் சென்றுகொண்டிருந்த போது, எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிடித்த பர்ன்ஸ் கடற்கரைக்கு செல்ல முடியுமா என அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் நான் கேட்டேன்.
அவரது உடல் சூரியனையும் தென்றலையும் உணர வேண்டும். அவருக்கு பிடித்த கடற்கரையில் 20 நிமிடங்கள் சாதாரணமாக உணர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
உடனே அந்த ஊழியர்களும் என்னுடைய கடைசி ஆசையினை நிறைவேற்றினர். அதன்பிறகு வீடு திரும்பிய இரண்டு வாரங்களில் கிறிஸ் ஷா உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் ஷா குடும்பத்துடன் பர்ன்ஸ் கடற்கரையில் கலந்துகொண்டனர்.