அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கிறிஸ்மஸ் தீவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் இரு பெண் குழந்தைகளும் தொடர்ச்சியாக அழுத வண்ணமுள்ளனர் அவர்களின் தாய் பிரியாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தம்பதியினரை தொடர்புகொண்ட அவர்களது ஆதரவாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிரியாவை அதிகாரிகள் விமானத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்ட வேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அதற்கு கிறிஸ்மஸ் தீவில் கிசிச்சையளிக்கப்படுகின்றது என அவருடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் இதனை உறுதி செய்துள்ளார்.
கடந்த 36 மணித்தியாலங்கள் அந்த குடும்பத்தவர்களிற்கு மாத்திரமில்லை அவர்களது ஆதரவாளகளிற்கும் மிகவும் கடினமானவையாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் ஆதரவாளர்கள் பிரியாவுடன் இன்று காலை தொலைபேசி மூலம் உரையாடியவேளை அவர் கடந்த வியாழக்கிழமை பிரியாவை அதிகாரிகள் விமானத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்ட வேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அதற்கு கிறிஸ்மஸ் தீவில் கிசிச்சையளிக்கப்படுகின்றது என தெரிவித்தார் எனவும் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரியாவை பலவந்தமாக விமானத்தில் ஏற்ற முற்பட்டவேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது,சுமார் ஐம்பது பேர் அவர்களை மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினர் அதற்கான வீடியோ படங்கள் எங்களிடம் உள்ளன,இதன் போது பிரியாவை அவர்கள் பலவந்தமாக விமான நிலையத்திற்குள் ஏற்றினார்கள் இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் தொடர்ச்சியாக அழுதவண்ணமுள்ளனர்,கோபிகா தனிமையை உணர்கின்றார் , கிறிஸ்மஸ்தீவில் உள்ள அகதிகள் அவர்கள் மாத்திரமே எனவும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
நடேஸ் பிரியா குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பது அனுமதிக்குமாறு நாங்கள் அமைச்சர் பீட்டர் டட்டனிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்,தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்கள் சமூகத்தவர்கள் இவ்வாறு நடத்தப்படுவது குறித்து நாங்கள் கடும் துயரமடைந்துள்ளோம் நாங்கள் பாதுகாப்பு தேடியே இங்கு வந்தோம் இலங்கை தமிழர்களிற்கு பாதுகாப்பான நாடில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.