ஒஷிவாராவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள 300 வீடுகள், கடைகள் எரிந்து சாம்பலாகின. 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடையில் தீ விபத்து
மும்பை ஒஷிவாராவில் உள்ள ரிலீப் சாலை குடிசை வீடுகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு சாலையோரத்தில் 100–க்கும் மேற்பட்ட மரச்சாமான் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. நேற்று மதியம் இங்குள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதை கடையில் இருந்தவர்கள் உடனடியாக கவனிக்கவில்லை. மரச்சாமான்கள் என்பதால் தீ மளமளவென பரவி எரிய ஆரம்பித்தது. இதன்பின்னரே கடையில் தீ எரிவதை ஊழியர்கள் பார்த்தனர்.
சிலிண்டர்கள் வெடித்தன
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு பரவியதுடன் கடைகளை ஒட்டி இருக்கும் குடிசை வீடுகள் மீதும் பற்றி எரிந்தது. இதனால் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதறி அடித்துக்கொண்டு குழந்தை, குட்டிகளுடன் வெளியே ஓட்டம் பிடித்தனர்.
வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த இடமே பயங்கரமாக அதிர்ந்தது. வீடுகளில் இருந்த டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் வெடித்து சிதறின. கடைகள் மற்றும் வீடுகள் கொழுந்து விட்டு எரிந்தன.
தீயணைப்பு படையினர் போராட்டம்
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 15 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 5 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. நாலாபுறமும் சுற்றி நின்றபடி தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படையினர் போராடினார்கள். மாலை 4.30 மணி வரையிலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தனர்.
4 பேர் படுகாயம்
இந்த கோர தீ விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தீ விபத்தில் ரிலீச் சாலை பகுதியில் உள்ள சுமார் 300 குடிசை வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது. வீடுகள் மற்றும் மரச்சாமான் கடைகளில் இருந்த எந்த பொருளும் மிஞ்சவில்லை. அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.
இதனால் வீடுகளை இழந்தவர்கள் கதறி அழுதபடி இருந்தனர். தீக்கிரையான அந்த பகுதி முழுவதும் மயானம் போல் காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தீ விபத்து தொடர்பாக ஒஷிவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.