ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்த நிலையில் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் உதவி மையங்களையும் உள்ளடக்கிய இடமாகும். அங்கு நேற்றிரவு பயங்கார சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து மதில்சுவருக்கு உட்புற ஜெனரேட்டர்களும் சிறிய அளவில் வெடித்தது. இது குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கிரீன் வில்லேஜ் மதில் சுவர் அருகே நின்ற ஒரு டிராக்டரில் குண்டு வைத்து வெடிக்க செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதல் வெளிநாட்டு தலைவர்களை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தலிபானின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித்((Zabihullah Mujahid)) தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுவட்டாரத்தில் தாக்குதல் நடத்த பலர் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆப்கானிஸ்தானின் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காபூலுக்கு அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத்((Zalmay Khalilzad)) வந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.