பாரிஸின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பொபினியில் சிறுவன் ஒருவன் 16 ஆவது தளத்தில் இருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொபினியின் Salvador Allende பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளான். உடனடியாக மருத்துவ உதவி குழு அழைக்கப்பட்ட போதும், சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இந்த துயர சம்பவமானது பொதுமக்கள் மத்தியிலேயே நடந்துள்ளது. குடியிருப்பின் 16-வது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் சில நொடிகளுக்குள்ளாக உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட விசாரணைகளில், கட்டிலில் இருந்த சூட்கேஸ் ஒன்றில் ஏறிய சிறுவன் அங்கிருந்து ஜன்னலில் ஏறமுயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அங்கிருந்த ஜன்னலில் கால் தவறி விழுந்துள்ளான். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொபினியில் ஏற்பாடு செய்திருந்த வார இறுதி கேளிக்கை நிகழ்வுகள் சிலவற்றை ரத்துச் செய்துள்ளதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.