விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக ஓபீட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க இஸ்ரோ ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லேண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.
அத்துடன் லேண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஓபீட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஓபீட்டரின் தொலைவை 50 கி.மீட்டராக குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இதற்கான பணிகளை ஆரம்பிக்க இரண்டு நாட்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான் (நிலவில் அது ஒரு நாள்). எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளிப்படும்.
லேண்டரிலுள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே 2 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 12 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளிப்படும்.
ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதிலுள்ள சூரிய ஒளி தகடுகள் செயற்படும் நிலையில் இருந்தால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் லேண்டரை கண்டுபிடித்தும், அதனால் எந்த பயனும் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் 20ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 2ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
பின்னர் இரண்டு முறை உந்து விசையைப் பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.
இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கலத் திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நேற்று அதிகாலையில் நடந்தது.
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அதிலிருந்து சமிக்ஞை எதுவும் கிடைக்காத நிலையில், நிலவிலிருந்து சரியாக 2.1 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது லேண்டர் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.
லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்த நிலையிலேயே லேண்டரின் இருப்பிடம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.