தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழுக்காகவும் தி.மு.க.தொடர்ந்து போராடுமென நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த நாட்டை ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதாவது ஒரு மொழி, ஒரு மதம் என்று எல்லாவற்றையும் அவர்கள் நினைக்கும் அடையாளத்துக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் இன்னொரு முகம்தான் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டமாகும்.
இதனூடாக மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனையே தி.மு.க.தொடர்ந்து எதிர்த்து வருகின்றது.
இதேவேளை தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்கிறதென அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவரது தவறான, நாகரிகமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க., தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இயக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.