கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய மூன்று இந்தியர்களிற்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.
2014 ஜூலை 14ம் திகதி வடக்கு கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. கஞ்சாவை இலங்கைக்குள் கடத்த முயன்றபோதே அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து 70 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருந்தது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த காளி மாரி, நாகப்பட்டினத்தை சேர்ந்த நிஜாம் குமரேஸ், இராமநாதபுரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் தேசிங்குராஜா ஆகியோரே கைதாகினர்.
காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மூவரும், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, கடந்த ஐந்து வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
இவர்களிற்கு எதிராக அபாயகரமான ஔதடங்கள் கட்டளை சட்டத்தின் கீழ், யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தபோதே அவர்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தம் மீதான குற்றச்சாட்டுக்களை மூவரும் ஏற்றுக்கொண்டதையடுத்து, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 40 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மூவரும் தலா 50 ஆயிரம் ரூபா பணத்தை சாட்சிகள் பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்க வேண்டுமென்றும், தவறின், 2 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.