வெளிநாட்டு விமானநிலையத்தில் இரண்டு மாம்பழங்களை திருடிய குற்றத்திற்காக அவர் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டார்.
துபாய் சர்வதேச விமானநிலையத்தில் வேலை செய்து வந்த 27 வயதான இந்திய ஊழியர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி, இரண்டு மாம்பழங்கள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அதன் பின் அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், வரும் 23-ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும், அன்று தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் டெர்மினல் 3-ல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கிருக்கும் கன்வேயர் பெல்ட்டில், இந்தியாவிற்கு அனுப்பப்பட வேண்டிய பழப் பெட்டியிலிருந்து இரண்டு மாம்பழங்களை திருடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரலில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி திருடியதற்கான ஆதாரமாக, சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், இதை அதிகாரி ஒருவர் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் விமானநிலையத்தில் திருடிய அவருக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பது 23-ஆம் திகதி தெரியும்.