கனடாவின் ஸ்காபுரோ நகரத்தில் தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவனான சசிகரன் தனபாலசிங்கம் (38) நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, அவர் எந்த உணர்ச்சிகளையும் காண்பிக்காமல் வந்து சென்றார்.
புதன்கிழமை மாலை 6 மணியளவில், 27 வயதான தர்ஷிகா ஜெகநாதனை ஃபிஷரி வீதியில் ஒரு ஓட்டுபாதையில் கத்தியால் வெட்டிக் கொன்றார்.
தர்ஷிகாவை வீதியொன்றில் விரட்டிச் சென்று வெட்டிச் சரித்தார். இந்த கொடூரமான தாக்குதலின் ஒரு பகுதியை எட்டு வயது குழந்தை கண்டது.
பொலிசார் வருவதற்குள் தப்பி ஓடிய தனபாலசிங்கம் சிறிது நேரத்திற்குப் கைது செய்யப்பட்டார். இப்போது ஒரு பொலஸ்காரரை அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போது முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை. நீதிபதி கேட்டபோது, மெல்லிய குரலில் தனது பெயரை மாத்திரம் உச்சரித்தார்.
சசிகரன்- தர்ஷிகா ஜோடி 2015இல் திருமணம் செய்தார்கள். அவர்களிற்கு குழந்தைகள் கிடையாது. தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி, வீட்டு வன்முறைக்குள்ளாக்கி வந்துள்ளார். இதனால் 2017இல் இருவரும் பிரிந்தனர்.
2017இல் எதிர்கொண்ட இரண்டு வன்முறை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து சசிகரன் 2019 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், பிணை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் 29 நாட்கள் தடுப்புக்காவலிலும் இருந்தார்.
சசிதரனின் தாக்குதல் சமயத்தில் 911 என்ற அவசர இலக்கத்தை அழுத்தி உதவிகோர முயன்றுள்ளார் தர்ஷிகா. எனினும், அவரது அலறல் சத்தம்தான் பதிவாகியது. அந்த சத்தமும் வழக்கில் சாட்சியாக இணைக்கப்படுவதாக பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
செப்ரெம்பர் 18ம் திகதி சசிதரன் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.